விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம். காஷ்மீரில் 1990களில் இந்து பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும், தீவிரவாதிகளின் எச்சரிக்கையால் பண்டிட்கள் அங்கிருந்து உயிர் பயத்துடன் வெளியேறியதை சித்தரிக்கும் இப்படம், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படம் பற்றி கருத்து தெரிவிக்க்காமல், அமைதி காத்து வரும் ஹிந்தி திரையுலகினரை விமர்சித்துள்ளார் நடிகை கங்கனா.
இது குறித்து கங்கனா கூறியிருப்பதாவது:
“தி காஷ்மீர் ஃபைல்ஸ்” படம் பற்றி திரையுலகில் நிலவும் அமைதியை கவனியுங்கள். இதன் கதை மட்டுமல்ல, வியாபாரமும் முன்மாதிரியாக இருக்கிறது. இந்த வருடத்தில் மிகவும் வெற்றிகரமான, லாபகரமான படமாக இது இருக்கும். பல கட்டுக்கதைகளையும் முன் முடிவுகளையும் உடைத்து இந்த படம், ரசிகர்களை திரையரங்கிற்கு மீண்டும் கொண்டு வந்திருக்கிறது. மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் காலை 6மணி காட்சிகள் கூட நிரம்பி வழிகிறது. இது நம்ப முடியாதது என்று அவர் கூறியுள்ளார்.
திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரன் ஆதர்ஷ் வெளியிட்டுள்ள இப்படத்தின் வசூல் விவரங்களை டேக் செய்துள்ள நடிகை கங்கனா “மலிவான விளம்பரம் இல்லை, போலி எண்ணிக்கை இல்லை, தேச விரோத திட்டம் ஏதுமில்லை. நாடு மாறும்போது திரைப்படங்களும் மாறும். ஜெய் ஹிந்த்” என்று கூறியுள்ளார்